நாகர்கோவில், ஆக. 1 –
கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி துறையின் சார்பில் ஆரல்வாய்மொழியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நூற்பாலை மற்றும் வடசேரி பகுதியில் அமைந்துள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சிக்கு கைத்திறன், கைத்தறி துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் எம்.விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: ஆரல்வாய்மொழி நூற்பாலை 1965ம் ஆண்டு நிறுவப்பட்டு, தற்போது 62 நிரந்தர தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 244 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நூற்பாலையின் அன்றாட உற்பத்தித் திறன், நூல் தரம் மற்றும் இயந்திரங்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறியப்பட்டது.
தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது ஆலையின் உற்பத்தித் தரத்தை உயர்த்தி, இலாபகரமாக இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து வடசேரி பெரியராசிங்கன் தெரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது 382 இயங்கும் தறிகளுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 2025-2026 ஆம் நிதியாண்டில் ரூ.260.88 இலட்சம் மதிப்பிலான ஜவுளிகள் உற்பத்தி செய்யப்பட்டு ரூ.304.55 இலட்சம் மதிப்பிலான ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டு சங்கம் தொடர் இலாபத்துடன் இயங்கி வருகிறது. தென் மாவட்டங்களில் கைத்தறி தொழிலை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். மேலும் கைத்தறி பூங்கா அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் கன்னியாகுமரி கூட்டுறவு சங்க நூற்பாலை மேலாண்மை இயக்குநர் முருகையா, கைத்தறி உதவி இயக்குநர் ஜெயசுதா, வடசேரி கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் பிரிட்மேன், துணை இயக்குநர் அருணாச்சலம், பணியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



