தருமபுரி, மே 14 –
தருமபுரி மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தையடுத்து தருமபுரி மாவட்டத்தில் 5 மது கடைகள் மூடப்பட்டன. வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றுக்கு 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள 717 மது கடைகள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு இந்த இடங்களுக்கு அருகில் செயல்படும் மதுக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மொத்தம் 67 டாஸ்மார்க் மது கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றின் அருகில் உள்ள மதுக்கடைகள் குறித்து டாஸ்மார்க் நிறுவனம் சார்பில் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகர பேருந்து நிலையம், பழைய புறநகர் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த மூன்று மது கடைகளும், வெங்கடசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் செயல்பட்டு வந்த இரண்டு மதுக்கடைகளும் என ஐந்து மது கடைகள் மூடப்பட்டன.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், தனியார் மற்றும் அரசு கல்வி நிலையங்கள் அருகில் உள்ள மது கடைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றையும் மூட டாஸ்மார்க் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.



