மார்த்தாண்டம், ஆக. 12 –
மார்த்தாண்டம் அருகே இலவுவிளை மார் எப்ரேம் இன்ஜினியரிங் கல்லூரியில் ரோடு சேப்டி கிளப் துவக்க விழா நடந்தது. தாளாளர் பங்கு பணியாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். முதல்வர் டாக்டர் லெனின் பிரைட், டிஎஸ்பி நல்ல சிவம், கல்லூரி டீன் ஆஸ்டின் ஆகியோர் பேசினர். எஸ்பி ஸ்டாலின் ரோடு சேப்டி கிளப்பை துவக்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேரும் தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பேரும் விபத்தில் இறக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 332 பேர் இறக்கிறார்கள். இது ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் என்று நிலைமையில் உள்ளது.
விபத்துக்கு காரணம் 85% மனிதத் தவறுகள் என்று சொல்லப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகம், மது போதையில் வாகனங்களில் செல்வதால் விபத்துகள் நடக்கின்றன. ஒரு வீட்டில் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் பெற்றோரை பாதிக்கும் உறவினரை பாதிக்கும் இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். விபத்தின் மூலம் யாரோ ஒருவர் இறந்தால் அந்த குடும்ப நிலை என்ன ஆகும் யாரோ இறந்தார் என்று கடந்து போகிறோம் அதைப்பற்றி யோசிப்பது கிடையாது. இதனால்தான் சாலை பாதுகாப்பு கிளப் அமைக்கப்படுகிறது.
மாற்றம் உங்களிடமிருந்து வரவேண்டும். நீங்கள் சமூக ஊடகங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். நீங்கள் மாற வேண்டும். மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்க வேண்டும். சாலை பாதுகாப்பு கிளப் இங்கு தொடங்கியுள்ளோம். எல்லோரும் ஹெல்மெட் போட வேண்டும். இது போலீஸ் துறைக்காக அல்ல. உங்களுக்காக உங்கள் குடும்பங்களுக்காகவும் நீங்கள் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
பொதுநலம் சக மனிதர் மீது அன்பும் அக்கறை செலுத்தும் போது ஏற்படும் சாலை உங்களோடையது மட்டுமல்ல எல்லோருடையது பொதுவானது என்பது உணர வேண்டும். ஒவ்வொருவரும் சுயநலத்தை விட்டு பொதுநலத்தை கடைபிடிக்க வேண்டும். பொது நலத்தை கடைபிடிப்பதால் சமூக மாற்றம் ஏற்படும் இவ்வாறு எஸ்.பி ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து இலவுவிளையிலிருந்து விரிகோடு, மார்த்தாண்டம், குழித்துறை வழியாக திருத்துவபுரம் வரை பைக் பேரணி நடந்தது.



