தருமபுரி, ஜூலை 07 –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டையில், மன்னர் அதியமான் கட்டியதாகக் கருதப்படும் தட்சணகாசி காலபைரவர் ஆலயத்தில் இன்று தேய்பிறை அஷ்டமி விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
காசிக்கு அடுத்ததாக காலபைரவருக்கென அமைந்துள்ள தனிச்சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில், மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி நாளில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். நேற்று அதிகாலை சிறப்பு யாகத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் பூசணி தீபம் ஏற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.



