மார்த்தாண்டம், நவ. 24 –
நட்டாலம் பகுதியில் தனியார் புளு மெட்டல் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த கல்குவாரி மூடிய நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 6ம் தேதி குவாரிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான ஜாக்கி உட்பட கல் உடைக்கும் உபகரணங்கள் கொள்ளை சென்றது. இது சம்பந்தமாக குவாரி மேலாளர் அனிஷ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வெட்டுவெந்நி பகுதியில் வைத்து மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் இந்திரசூடன் உட்பட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் நட்டாலத்தில் கல்குவாரியில் உபகரணங்கள் கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டான். குழித்துறை பழவார் பகுதியை சேர்ந்த சுதன் (34). இவரோடு நான்கு பேர் சேர்ந்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மூன்று பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஒரு லட்சம் மதிப்பிலான ஜாக்கி உட்பட கல் உடைக்க பயன்படுத்தும் உபகரணங்களை மீட்கப்பட்டது.



