புதுக்கடை, நவ. 20 –
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நேரம் கடம்பாட்டு விளை, செண்பக மூடு பகுதியில் மின்பாதை ஆய்வாளர் மாசில்லாமணி மற்றும் ஊழியர்கள் மின்பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது கடம்பாட்டு விளை பகுதியை சேர்ந்த மெர்லின் ஜோஸ் (20) என்பவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து, மின்பாதை ஆய்வாளரிடம் தகராறு செய்தார். மேலும் அவரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் மூக்கு உடைந்து மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறியது. மேலும் அவர் செல்போனையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இது குறித்து மாசிலாமணி மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து காயம் அடைந்த மாசிலாமணி சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மின்வாரிய இளநிலை பொறியாளர் மகேஷ் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மெர்லின் ஜோஸ் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.


