ராமநாதபுரம், ஜூலை 2 –
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் 2026 தேர்தலில் மீண்டும் அமோக வெற்றி பெறுவது உறுதி ஆகிவிட்டது என்று திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கூறினார்.
ராமநாதபுரத்தில் ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் ஒரணியில் தமிழ்நாடு அதாவது மண், மொழி, கலாச்சாரம் மூலம் இணைய ராமநாதபுரம் மாவட்டத்தில் 1374 வாக்குச் சாவடி நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து விளக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு அநீதி விளைவித்துள்ளது. தமிழ்நாட்டில் இனம், மொழியை குறிப்பாக தமிழை அழிக்க ஒன்றிய அரசு பல வழிகளில் முயற்சி செய்து கல்வியில் மும்மொழிக் கொள்கையை திணித்து தமிழை அழிக்க முயற்சிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரு மொழி கொள்கையை தாய் மொழி, இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கைக்கு மட்டுமே குரல் கொடுத்து வருகிறார். இதனால் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு கல்வி நிதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
ஒன்றிய அரசு செய்ய வேண்டிய பணியான தொல்லியல் ஆய்வை தமிழக அரசு கீழடியில் செய்து வருகிறது. கீழடியில் செய்த ஆய்வில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள தமிழ் கலாச்சாரம் தெரிய வந்துள்ளதை ஒன்றிய அரசு அங்கீகாரம் செய்ய மறுக்கிறது. ஒன்றிய அரசு தொகுதி மறுவரையறை என தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை 39 ஐ குறைத்து பிரதிநிதித்துவத்தை குறைக்க வழிவகை செய்கிறது. நீட் தேர்வு விலக்களிக்காமல் வஞ்சித்து வருகிறது.
இது போல் ஏராளமான மக்கள் விரோத செயல்களை பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தமிழ்நாட்டு பெண்கள் மத்தியில் தமிழக அரசு மீது நன்மதிப்பு கிடைத்துள்ளது. மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்டங்கள் மாணவர்கள், பொதுமக்களிடம் நல் வரவேற்பை பெற்றுள்ளது. ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாமில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 90 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் வீதம் 4 தொகுதிகளில் 4 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கும் இலக்குடன் திமுக தொண்டர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 2021 சட்ட மன்ற தேர்தலில் பரமக்குடி (தனி), திருவாடானை ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 தொகுதிகளை வென்று 100 சதவீத வெற்றி இலக்கை அடைந்தது போல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் 4 தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றி அமோக வெற்றி உறுதி ஆகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.