முதுகுளத்தூர், செப். 30
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தி வரும் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாமின் 5-ம் நாளில், மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் தலைமை வகித்தார். பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் நூருல் அமின் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மனநல மருத்துவர் டாக்டர் ராஜு சுந்தர் மற்றும் மாவட்ட மனநல சமூகப்பணியாளர் அபினாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மனநலம் தொடர்பான பயிற்சிகளை வழங்கினர். மேலும், மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை எவ்வாறு கண்டறிவது, அவற்றை எதிர்கொண்டு உரிய தீர்வுகளை பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்களின் மனநலத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் தர்மராஜ் நன்றி கூறினார்.



