நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு
தருமபுரி, செப்.7-
தருமபுரியில் இருந்து ஓசூர் செல்லும் ராஜம் தனியார் பேருந்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் பி.கே. சிவா, தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில், கடந்த 3-ந்தேதி பாலக்கோட்டில் இருந்து ஓசூருக்கு 3 பேர் ராஜம் தனியார் பேருந்தில் பயணம் செய்ததாகவும், ஒருவருக்கு ரூ.50 வீதம் மொத்தம் ரூ.150 வசூலிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், ஓசூரில் இருந்து பாலக்கோட்டிற்கு அரசு பேருந்தில் ஒருவருக்கு ரூ.40 வீதம் 3 பேருக்கு ரூ.120 மட்டுமே வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாலக்கோட்டில் இருந்து ஓசூருக்கு தனியார் பேருந்தில் ஒருவருக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், அந்த பேருந்தில் வழங்கப்படும் பயணச்சீட்டில் பேருந்து எண் மற்றும் பேருந்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பேருந்தின் உரிமையாளர் பெயர் ஜெகதீசன் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பேருந்து மீது அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.கே. சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.



