தஞ்சாவூர், ஜூலை 2 –
குறுவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 31ம் தேதி கடைசி நாள் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண்மை துறையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் எதிர்பாராமல் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பில் இருந்து காத்து விவசாயிகளில் வாழ்வாதாரத்தை காத்திட மத்திய மாநில அரசின் பங்களிப்போடு செயல்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல், வாழை, மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களுக்கு நடப்ப ஆண்டு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்து கொள்ள பொது காப்பீடு நிறுவனம் மற்றும் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி தேர்வு செய்யப்பட்டு பயிர் காப்பீடு பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. குறுவைப் பயிர் காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூபாய் 778 மட்டும் செலுத்த வேண்டும்.
கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மூலமாக பதிவு செய்ய இயலும், கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
இயற்கை காரணிகளால் விதைப்பு செய்ய இயலாத நிலை, நடவு அல்லது விதைப்பு பொய்த்து போதல், மழை வெள்ளம் பாதிப்பு, அறுவடைக்கு பிந்திய இழப்புகள் போன்ற சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் இழப்பீடு பெற வாய்ப்பு உள்ளது. பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கிராமத்தில்பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் மட்டுமே இழப்பீடு பெற இயலும்.
எனவே விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் குறுவை விதைப்பு அல்லது நடவு சான்று சான்றிதழ் பெற்று தங்கள் குறுவை நெற்பயிரை வருகிற 31-ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண் டும் விவசாயிகள் காப்பீடு செய்யும்போது முன்மொழிவு படிவத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் அல்லது விதைப்பு சான்றிதழ், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செயல்பாட்டில் உள்ள வங்கி கணக் கு புத்தகத்தின் தெளிவான முதல் பக்க நகல் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து அளிக்க வேண்டும்.
கட்டணத் தொகையை செய்த பின்பு அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங் களில் பெற்றுக் கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் குறிப்பாக பருவம், கிராமத்தின் பெயர் மற்றும் நிலத்தின் உரிமையாளர் குத்தகைதாரர் ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். எனவே விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன் கூட்டியே காப்பீடு செய்து கடைசி நேரத்தில் பதிவு செய்வதில் ஏற்படும் பல்வேறு சிரமங்களை தவிர்க்க வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



