தருமபுரி, ஜூன் 20 –
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பிக்கல்நாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து (35) தவெக பிரமுகரான இவர் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். மாரண்டஅள்ளியில் உள்ள ஹோண்டா ஷோரூமில் புதியதாக இரு சக்கர வாகனம் எடுக்க ரூ. 31,000 முன் தொகையாக செலுத்தினார். அவர் கொடுத்த பணத்தை எண்ணும் பொழுது 19 ஐநூறு நோட்டுகள் ( ரூ. 9,500) போலீ கள்ள நோட்டுக்கள் என தெரிய வந்தது. உடனடியாக ஷோரூம் மேலாளர் ரஞ்சித் மாரண்டஅள்ளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் காவல்துறையினர் ரூபாய் நோட்டுக்களை சோதனை செய்ததில் 19 ஐநூறு ரூபாய் நோட்டுக்களும் கள்ள நோட்டுக்கள் என தெரிய வந்தது. அதனை தொடர்ந்து கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அங்கமுத்துவை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.



