மார்த்தாண்டம், ஜூன் 8 –
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (39). வக்கீல் ஆக உள்ளார். இவர் அந்த பகுதியில் வக்கீல் அலுவலகம் கட்ட முடிவு செய்தார். இதை அடுத்து அதே பகுதியை சேர்ந்த கொத்தனாரான வின்சென்ட் என்பவரிடம் முன்பணமாக ரூ 1 லட்சத்து 40 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட வின்சென்ட் நீண்ட நாட்கள் கடந்த பின்பும் அலுவலகம் கட்டும் பணியை தொடங்காமல் இழுத்தடித்துள்ளார்.
இதை அடுத்து தினேஷ் ஏன் இன்னும் பணியை தொடங்கவில்லை என வின்சென்டிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவ தினம் தினேஷ் மேல்புறத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு காரில் சென்றார். அப்போது அங்கு சென்ற வின்சென்ட், ராபி (55) மற்றும் கண்டால் தெரியும் ஒருவர் என 3 பேர் சேர்ந்து தினேஷை கெட்ட வார்த்தைகள் பேசி, திட்டி கீழே தள்ளி தாக்கியுள்ளனர். மேலும் இரும்பு கம்பியால் கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு கொலை மிரட்டல் கொடுத்து சென்றனர்.
தாக்குதலில் காயம் அடைந்த தினேஷ் குழித்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து வின்சென்ட் உட்பட 3 பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


