மார்த்தாண்டம், நவ. 8 –
குலசேகரம் மாமூடு பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தன் வீட்டு தேவைக்காக குலசேகரம் பகுதியில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 169 கிராம் தந்த தங்க நகைகளை ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கு அடமானம் வைத்துள்ளார். இதற்கு மாதம் தோறும் வட்டியும் கட்டி உள்ளார். அதன் பின்னர் பணத்தை தயார் செய்து, நகையை திரும்ப எடுக்க செல்லும்போது அங்கு இருந்த மேலாளர் நகை நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பாதுகாக்க வைத்துள்ளதாகவும், இரண்டு நாட்களில் நகையை திரும்ப தருவதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் அங்கு சென்று கேட்டால் சரியான பதில் கூறாமல் கடத்தி வந்துள்ளனர்.
நகை திரும்ப கிடைக்காததால் ஜெயசந்திரன் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நிதி நிறுவனத்தின் மேல் அதிகாரிகள் குலசேகரம் நிதி நிறுவனத்தில் இருந்த நகையை ஆய்வு செய்தபோது, வங்கியில் நகை இல்லாதது தெரிய வந்தது. உடனே வங்கி நிறுவன மேலதிகாரிகள் அங்கு மேலாளராக பணிபுரிந்து வந்த குலசேகரம் பகுதி சேர்ந்த சுஜின், அரமன்னம் பகுதி சேர்ந்த துணை மேலாளர் கார்த்திகா, திருவரம்பு பகுதி கணக்கர் கவிதா ஆகியோர் மீது குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் நடத்தி விசாரணையில் இவர்கள் நகையை மோசடி செய்து வேறு ஒரு வங்கியில் ரூ. 17 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அடமானம் வைத்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


