கன்னியாகுமரி, நவ. 24 –
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதனால் கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர். வாரத்தின் கடைசி விடுமுறை நாளான நேற்று வழக்கத்தைவிட அதிகமான அளவில் அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்த வண்ணமாக உள்ளனர்.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குவிந்து இருந்தனர். ஆனால் மழை மேகமூட்டம் காரணமாக சூரியன் உதய மாகும் காட்சி தெளிவாகத் தெரியவில்லை. இதனால் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் ஏராளமான அய்யப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் புனித நீராடி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகனந்தர் நினைவு மண்டபம், கண்ணாடி பாலம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டு வந்தனர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம் உள்பட அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் இன்று காலையில் இருந்தே அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது.
சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. சுடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.



