தேனி, செப் 11.
தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. இரா. வைத்திநாதன், இ.ஆ.ப., இன்று (செப்.10) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வரும் செப்.12-ஆம் தேதி கம்பம் CPU மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 8,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ. உள்ளிட்ட கல்வித்தகுதி கொண்டவர்கள் முகாமில் பங்கேற்கலாம். திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புக்கான தேர்வுகளும் நடைபெற உள்ளன. முகாமில் பங்கேற்க எவ்விதக் கட்டணமும் இல்லை.
வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.



