தஞ்சாவூர், மே 21 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசு 2006ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தச் திட்டத்தின் கீழ் பயன் அடைய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக புதுப்பித்திருக்க வேண்டும்.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்பாக பதிவு செய்து, 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூபாய் 200ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 300ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 400ம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 600 ம் வழங்கப்பட்டு வருகிறது.
உதவித்தொகை பெற பொது பிரிவினராக இருந்தால் 40 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினராக இருந்தால் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 72,000 மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூபாய் 750ம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூபாய் 1,000ம் உதவித் தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி அல்லது அதற்கு முன்பாக பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.
உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனங்களிலும் முழு நேரமாக மாணவராக இருக்கக் கூடாது. தொலைதூரக் கல்வி பயில்பவராக இருக்கலாம், அரசு துறை, தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதிவிலோ அல்லது சுய வேலை வாய்ப்பிலோ ஈடுபடுவதாக இருக்கக்கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். எந்த ஒரு அரசு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது.
தகுதி உடையவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால் https://tnvelaiaaippu. gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் இந்த மாதத்திற்குள் (மே) அலுவலக வேலை நாட்களில் தஞ்சாவூர் மணி மண்டபம் எதிரே அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டு மையத்தில் நேரில் அளிக்க வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



