மார்த்தாண்டம், நவ. 4 –
குமரி மாவட்டத்தில் பைபர் படகுகளில் மீன்பிடி தொழில் செய்ய மீனவர்களுக்கு தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் மாதந்தோறும் படகு ஒன்றுக்கு 300 லிட்டர் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மண்ணெண்ணையை பயனாளிகள் பயன்படுத்தாமல் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். கள்ளச் சந்தையில் வாங்கும் வியாபாரிகள் மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இப்படி கடத்திச் செல்லப்படும் மண்ணெண்ணெய் அவ்வப்போது போலீசார் சோதனையின் போது மடக்கி பிடித்து வாகனத்துடன் பறிமுதல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலை சுமார் 5.30 மணி அளவில் நீரோடி சோதனை சாவடியில் பணியில் இருந்த இரணியல் காவல் நிலைய போலீஸ் ராஜேஷ் என்பவர் அந்த வழியே வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் கேன்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார். இதையடுத்து வாகனத்துடன் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. கொல்லங்கோடு போலீசார் நடத்திய சோதனையில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 40 கேன்களில் சுமார் 1500 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் மண்ணெண்ணெயுடன் வாகனத்தை நாகர்கோவில் புட்செல் போலீசிடம் ஒப்படைத்தனர்.



