ஈரோடு, ஆக.25:
ஈரோடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் பருவகால மாற்றங்களால் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் சுத்தமான நீரில் இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டவை. வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கும் தண்ணீர் மூலம் கொசுக்கள் பெருகுவதால், பயன்படுத்தாத டயர்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள், பூந்தொட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை நன்றாக தேய்த்து கழுவி, காற்று புகாதவாறு மூடி வைக்க வேண்டும். ஏடிஸ் கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும் என்பதால், பகல் நேரங்களிலும் கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். டெங்கு மட்டுமின்றி மலேரியா, எலி காய்ச்சல், ஸ்கரப் டைபஸ், டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
சுயமாக மருந்து உட்கொள்வதையும், போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். உரிய நேரத்தில் முறையான மருத்துவ சிகிச்சை பெற்றால் டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உள்ளாட்சி அமைப்புகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், நீர்வழங்கல் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து வாரந்தோறும் திங்கட்கிழமை காய்ச்சல் தடுப்பு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாவட்டம் முழுவதும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஆய்வு செய்து, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கு வரும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.



