மார்த்தாண்டம், ஏப். 2 –
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்த மாவட்டமாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து துறையினர் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று சுற்றுலாத்தலமான மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக மாத்தூர் தொட்டிபாலத்தின் முகப்பில் அனைவரும் பார்க்கும் வண்ணம் தேர்தல் விழிப்புணர்வு வாசனங்கள் அடங்கிய பாதகைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பார்வையிட்டு, மாவட்டத்தில் உள்ள முதல் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், முதியோர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மரகதவல்லி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



