கன்னியாகுமரி, ஜூன் 28 –
ஈரான்-இஸ்ரேல் போரின் காரணமாக ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்டு இந்தியா கொண்டுவர சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 மீனவர்கள் ஈரான் நாட்டில் தங்கி அங்கேயுள்ள முதலாளிகளின் படகில் மீன்பிடித்து வருகின்றனர். கிஷ் தீவு, பந்தர் அப்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் மீன்பிடிக்கின்றனர்.
போர் காரணமாக ஒவ்வொருவரும் தங்கள் உயிரை காத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைந்த நிலையில் இம்மீனவர்களை இவர்களின் முதலாளிகள் உள்ளிட்ட யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது இம்மீனவர்கள் மற்றும் குடும்பத்தினரின் வருத்தமாகும்.
இம்மீனவர்கள் போதிய உணவின்றி தங்களது படகிலேயே மறைந்திருந்து கிடைத்ததை பகிர்ந்துண்டு நாட்களை ஓட்டியுள்ளனர். குண்டு மழையின் சத்தத்தால் தங்களுக்கும் என்னாகுமோ என்ற பயமும், வீட்டாரை நினைத்து பெருங்கவலையும் இவர்களை சீர்குலைத்துள்ளது. உறவினர்களிடம் பேச தொலைத்தொடர்பும் சீராக இல்லை. போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டாலும் பயம், அதிர்ச்சியிலிருந்து இவர்கள் மீளவில்லை.
ஈரானிலுள்ள இந்திய தூதரகம் எடுத்த நடவடிக்கை காரணமாக அங்கே பயின்ற இந்திய மாணவர்கள் மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
குமரி மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை, வருவாய்துறை, காவல்துறையினர் ஈரானில் உள்ள நமது மீனவர்களை ஊருக்கு கொண்டுவர இவர்களை பற்றிய தகவல்களை குடும்பத்தினரிடமிருந்து தொடர்ந்து சேகரித்த வண்ணம் உள்ளனர். அதிகாரிகளின் இந்நடவடிக்கை குடும்பத்தினருக்கு ஓரளவு ஆறுதலை அளித்துள்ளது.
இம்மீனவர்களை உடனடியாக இந்தியா கொண்டுவர ஆவண செய்யவேண்டும் எனக்கேட்டு இந்திய பிரதமர், வெளிவிவகாரத்துறை அமைச்சர், தமிழக முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி வேண்டுகோள் வைத்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் ஈரானிலிருந்து நம் மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை மூலம் மீட்டது போல இக்கட்டான இந்த சூழ்நிலையிலும் அதே நடவடிக்கை மூலம் ஈரானில் தவிக்கும் இம்மீனவர்களை மீட்க ஜஸ்டின் ஆன்டணி கோரியுள்ளார்.



