தஞ்சாவூர், மே 5 –
தஞ்சாவூர் சட்டசபைத் தொகுதியை 1952 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதுவரை 18 முறை தேர்தலை சந்தித்துள்ள இத்தொகுதியில் திமுக 10 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
தஞ்சாவூர் தொகுதியை பொறுத்தவரையில் திமுக கோட்டை என்பார்கள். இந்த தொகுதியில் 1962 ஆம் ஆண்டு திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்படிப்பட்ட திமுக கோட்டையான தஞ்சாவூர் தொகுதியில் சந்தித்த முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று, தஞ்சாவூர் தொகுதியை வசப்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் இறுதி வரை தவெக வேட்பாளர் முன்னிலையில் இருந்து வந்தார். அவருக்கு அடுத்த இடத்தை திமுக வேட்பாளர் சண்.ராமநாதன், இரண்டாவது இடத்தை அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தமும் பிடித்தனர்.
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட விஜய் சரவணன் 86,599 ஓட்டுகள் பெற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை சுமார் 60,300 ஓட்டுக்கள் வித்தியாசத்திலும், மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்ட சண். ராமநாதனை சுமார் 16,955 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாக ராஜன், தஞ்சாவூர் வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் நித்யாவிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை விஜய் சரவணன் பெற்றுக் கொண்டார்.



