தருமபுரி, ஜூலை 18 –
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ‘வீ தி லீடர்ஸ்’ சார்பில் துரை கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த அமைப்பின் தலைவர் துரை என்ற சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், நிர்வாகிகள் கலைச்செல்வன், சிவா, தினேஷ், ராகுல், முருகன், மணிகண்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன், கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் போட்டியில் பங்கேற்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 51 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 41 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 31 ஆயிரம் ரூபாய், நான்காம் பரிசாக 21 ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்தாம் பரிசாக 11 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், வெற்றி பெற்ற அணிகள் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். பழனி கோயிலுக்குச் சொந்தமானதாக கூறப்படும் நிலம் தொடர்பான விவகாரத்தில், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கு ‘வீ தி லீடர்ஸ்’ ஆதரவு அளிக்கும் என்றும்,
அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு தனிப்பட்ட முறையில் ஆசிரியர் பணியிட மாறுதல் வழங்கப்பட்டிருந்தால், அது தவறான நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்தார்.
மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசியபோது மேகதாது அணை கட்டும் முயற்சியை தமிழக மக்களின் நலன் கருதி எதிர்ப்போம் என்றும், அணை கட்டும் பணியை நடைபெற விடமாட்டோம் என்றும் தெரிவித்தார். மத்திய அரசு இரு மாநிலங்களின் நலனையும் கருத்தில் கொண்டு நடுநிலையுடன் செயல்படும் என நம்புவதாக கூறிய அவர், தமிழக முதல்வர் விஜய், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரை தொடர்பு கொண்டு மேகதாது அணை தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க, அண்ணாமலை தலைமையில் தூதுக்குழுவாகச் சென்று டி.கே. சிவக்குமாரை சந்திக்கவும் தயாராக இருப்பதாக முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன் தெரிவித்தார்.



