தருமபுரி, ஏப்ரல் 28 –
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மதுக்கடைகள் (சந்து கடைகள்) சாதாரணமாக செயல்பட்டு வருகின்றன. இதனை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள் காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் போடூர் கிராமத்தில் 4 சந்து கடைகள் செயல்பட்டு வந்துள்ளன. இதனால் அதிகாலை நேரம் முதலே மதுபிரியர்கள் சந்துக்கடைகளில் மது வாங்கி குடித்து வந்துள்ளனர். மேலும் மதுப்பிரியர்கள் அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கு போலீசாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பெண்கள், இளைஞர்கள் என பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போடூர் பகுதியில் செயல்பட்டு வந்த 4 சந்து கடைகளையும் அடித்து நொறுக்கினார். அப்போது பொதுமக்களிடம் எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்ட சந்துக்கடை உரிமையாளர் கோவிந்தனை பெண்கள் ஓட ஓட விரட்டி தாக்கினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சுரேஷ்குமார் மதுபானங்களை பதுங்கி விட்டதாக போரூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (48), மாதேஷ் (58), சவுதாம்மாள் (39) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.


