திருப்பத்தூர், ஆக. 28:
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) முதுகலை கணினி அறிவியல் துறை சார்பில், ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இருநாள் சமூக விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவர்களின் அறிவையும் திறமைகளையும் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியை துறைத் தலைவர் முனைவர் ம. பூவிழி, சமூக விரிவாக்க பொறுப்பாசிரியர் முனைவர் ஆ. மேகலா, உதவிப் பேராசிரியர் தே. கஜலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதல் நாளில் பெருமாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதுகலை கணினி அறிவியல் துறை மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கல்வியின் முக்கியத்துவம், சாலை பாதுகாப்பு, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், கைபேசி பயன்பாடு மற்றும் சமூக ஊடகங்களை பாதுகாப்பாக பயன்படுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் நாடகம், பேச்சு, பாடல் மற்றும் செயல்பாடுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பாராட்டினர்.
கிராம மக்களுக்கு விழிப்புணர்வு
இரண்டாம் நாளில் பெருமாப்பட்டு கிராமத்தில் பொதுமக்களுக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகாதேவராஜ், ஊராட்சி செயலாளர் அருள், மக்கள் நலப் பணியாளர் பழனி, இளைஞரணி தலைவர் ராஜேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் துறைத் தலைவர் முனைவர் ம. பூவிழி, சமூக விரிவாக்க பொறுப்பாசிரியர் முனைவர் ஆ. மேகலா மற்றும் உதவிப் பேராசிரியர் தே. கஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் கிராம மக்களிடம் கல்வியின் அவசியம், ஆரோக்கியமான உணவு முறைகள், வேளாண்மை மற்றும் கல்விக்கான மத்திய அரசு திட்டங்கள் குறித்து விளக்கினர்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மரம் நடும் இயக்கமும் நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
மாணவர்களின் சமூகப் பங்களிப்பையும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர்களின் முயற்சியையும் கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர். கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம் சமூக விழிப்புணர்வு மற்றும் பொது நலன் மேம்படும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது. இரு நாள் சமூக விரிவாக்க நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.



