நாகர்கோவில், ஏப். 24 –
குமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பண விநியோகத்தை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனை நடந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் 21 பறக்கும் படைகளும், 24 நிலையான கண்காணிப்பு படைகளும் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இந்த வகையில் நேற்று காலை வரை 1 கோடியே 25 லட்சத்தி 1060 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நாளான நேற்றும் சோதனை தீவிரமாக நடந்து வந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்த வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பறக்கும் படை அலுவலர் சுஷ்மா தலைமையில் ஆசாரிபள்ளம், கீழப் பெருவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டின் சுவரில் துணிப்பையில் சுற்றிய பணம் இருந்தது கண்டுபிடித்தனர். அதை பறக்கும் படையினர் கைப்பற்றினர். அந்த பையை சோதனை செய்தபோது அதில் மொத்தம் ரூ 38,000 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து அந்த வீட்டில் இருந்தவர்களிடம் கேட்டபோது தங்களுக்கு இது குறித்து தெரியாது என கூறினர். இதை அடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றி கொண்டு சென்றனர். இந்த பணம் அந்த வீட்டு சுவரில் வைத்தது யார்? அரசியல் கட்சியின் பணமா? என்பது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


