தக்கலை, ஜன. 24 –
தக்கலை அருகே உள்ள திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஷேக் மகள் அப்ரா (19). பிளஸ் 1 வரை படித்துள்ள இவர் கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கி இருந்து வந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குலசேகரத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயமானது. இந்த நிலையில் கடந்த மாதம் உறவினர் இல்ல திருமணத்திற்காக அப்ரா தக்கலைக்கு வந்தார். அதன் பிறகு காப்பகம் செல்லாமல் இங்கேயே இருந்த அவர் திடீரென மாயமானார்.
இதனை தொடர்ந்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மற்றொரு உறவினரின் செல்போனுக்கு அப்ரா ஒரு குறுந்தகவல் அனுப்பி இருந்தார். அதில் என்னை தேட வேண்டாம். என் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அப்ரா மாயமானது குறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அப்ராவை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் ஒரு வாலிபருடன் தக்கலை போலீசில் தஞ்சம் அடைந்தார். அந்த வாலிபரை தான் காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் உறவினர்கள் போலீசில் வந்து அப்ராவிடம் பேசினார்கள். ஆனால் அவர் காதலுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். அந்த வாலிபர் சமீபத்தில் தக்கலையில் நடந்த ஒரு விழாவுக்கு வந்த போது அப்ராவை சந்தித்ததும், அதன் பிறகு இரண்டு பேருக்கும் காதல் ஏற்பட்டதும் தெரிய வந்தது.
வாலிபருக்கு இதுவரை திருமண வயது எட்டவில்லை. தற்போது 20 வயது ஆகி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபருக்கு 21 வயது ஆனதும், இருவரும் திருமணம் செய்துவிட்டு பதிவு சான்றிதழை போலீஸ் நிலையத்தில் வந்து காண்பிக்க போலீசார் அறிவுரை கூறி காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.



