திருப்பத்தூர், ஜூலை 8 –
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் சாலைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை சுமார் 65.00 கி.மீ நீளம் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், கிராம சாலைகள் மற்றும் நகராட்சி சாலைகள் உள்ளன. ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி வழியே கிருஷ்ணகிரி ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனவேகம். ஓட்டுநரின் கவனக் குறைவு. சாலை பயன்படுத்துவரின் அறியாமை போன்ற பல்வேறு காரணங்களால் அதிக விபத்து நடக்கும் சாலையான சென்னை – பெங்களுர்சாலையை மாவட்ட ஆட்சியர் நேரடியாக விபத்து நடந்த Black Spot மற்றும் Critical corridor பகுதிகளை இன்று ஆய்வு செய்தார்.
இதில், திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான பச்சூர் சந்திப்பு, வெலக்கல்நத்தம் செட்டேரி சந்திப்பு, மல்லப்பள்ளி சந்திப்பு, நாட்றம்பள்ளி சந்திப்பு மற்றும் வாணியம்பாடி வளையாம்பட்டு முருகன் கோவில் சந்திப்பு ஆகிய அதிக விபத்துகள் ஏற்படும் சாலை சந்திப்பு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர், போக்குவரத்து வட்டார அலுவலர், வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் ஆகிய சாலை தொடர்பான அலுவலர்களிடம் விபத்து நடக்கும் பகுதிகளில் விபத்தை தடுக்கும் பொருட்டு நிரந்திர தீர்வாக பொதுமக்கள் மற்றும் சிறிய வாகனம் செல்லும் வகையில் விபத்து பகுதியில் சாலை கீழ்பாலங்கள் அமைக்க அறிவுரை வழங்கினார்.
மேலும், தற்காலிக தீர்வாக வேகத்தை குறைக்கும் வகையில் சாலையில் தடிமனான வெள்ளை கோடுகள், இரவில் ஒளிரும் பட்டைகள், உயர்மின் கோபுரம். சிவப்பு எச்சரிக்கை விளக்கு உடனடியாக பொருத்தப்பட வேண்டும் என பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், நிரந்திர தீர்வு செய்ய சாலை கீழ்பாலம் அமைக்கும் பணிக்கான மதிப்பீடு தயாரிக்க சம்மந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மேலும், செட்டேரி, வாணியம்பாடி சாலை சந்திப்பு விபத்து பகுதியில் உள்ள பொதுமக்களிடம் சாலை விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சாலையை பாதுகாப்பாக பயணிப்பது மற்றும் சாலையை கடப்பது குறித்தும் விழிப்புணர்வு மேற்கொண்டு. பொதுமக்களின் கருத்துகளை கேட்டு அதில் செய்யப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ள சாலை தொடர்பான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், நாட்றம்பள்ளி சாலை சந்திப்பு விபத்து பகுதியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்து, அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உடனடியாக போர்வெல் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், சாலை ஓரங்களில் உள்ள மரங்களின் செடி மற்றும் கிளைகள் சாலையை ஆக்கிரமித்து விபத்துகளுக்கு வழிவகுப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக வெட்டி அகற்ற தேவையான மரங்களின் கிளைகளை உடனடியாக வெட்டி அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வனத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இவ்வாய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முரளி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பன்னீர்செல்வம் (திருப்பத்தூர்). வெங்கட ராகவன் (வாணியம்பாடி), தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) துணை மேலாளர் ஞானசேகரன், துணைக்காவல் கண்காணிப்பாளர் பமகாலட்சுமி, வாணியம்பாடி நெடுஞ்சாலைத்துறை இளநிலைப்பொறியாளர் பாபுராஜ் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



