தேனி, மே 22 –
தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தும் வகையில் ரூ.2.45 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டட சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகளில் வகுப்பறை சுவர்கள் பழுது பார்க்குதல், தரைத்தளம் சீரமைத்தல், மழைநீர் ஒழுகலை தடுக்கும் பணிகள், மின்வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் (21.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான கல்விச் சூழல் வழங்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மீதமுள்ள பணிகளை தரமாகவும் விரைவாகவும் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.



