தர்மபுரி, ஜூன் 15 –
தர்மபுரியில் அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவில் அரசு, தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மற்றும் உயர்கல்வி படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கும், ஆதரவற்ற உடல் நிலை பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நலத்திட்ட உதவிகள், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியானது அறக்கட்டளையின் தலைவர் எல்.அப்பாதுரை தலைமையில் கன்னிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடந்தது.
தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் கன்னிப்பட்டி மாரியம்மன் கோவிலில் சுமார் 2 லட்சம் மதிப்பில் அமைத்துக் கொடுத்த உணவு கூடத்தினை மாநிலத் தலைவர் அப்பாதுரை திறந்து வைத்தார். பின்னர் மாவட்டத் தலைவர் நாகமணி வரவேற்புரை ஆற்றினார். மேலும் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம், மற்றும் மாநில துணை செயலாளர் சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பின்னர் தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்தாண்டு 12 மற்றும் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தலா ஜந்து ஆயிரம், நான்கு ஆயிரம், மூன்று ஆயிரம், என பத்து பேருக்கு ஊக்க தொகையாகவும், கல்லூரில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையுடன் கேடயம் வழங்கி பாராட்டினார்.
ஆதரவற்ற மற்றும் உடல் நலன் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தலா 3 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்துக்களுடன் கூடிய உணவுப்பொருள் போன்றவற்றை மாநில தலைவர் அப்பாதுரை வழங்கி, பின்னர் பேசிய மாநில தலைவர், கன்னிப்பட்டி மாரியம்மன் கோவில் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று ஜெனரேட்டர் வழங்குவதாக உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் தர்மபுரி மாவட்டம் துணை தலைவர் ஆனந்த் வரவேற்பு நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



