மார்த்தாண்டம், பிப். 21 –
குமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை பகுதியான குளப்புறம் பத்திரகாளி அம்மன் கோயில் கடந்த மூன்று ஆண்டுகளாக புனர் பிரதிஷ்டை பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் உற்போது கோயில் பணிகள் முடிவடைந்த நிலையில் புனர் பிரதிஷ்டை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்வான கணபதி, பத்திரகாளி அம்மன் பிரதிஷ்டை ஆஜார ரீதியான பூஜைகளுடன் நடைபெற்றதை தொடர்ந்து, வேத பண்டிதர்கள் ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோயிலை வலம் வந்து எடுத்து சென்று கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அதை தொடர்ந்து கோயில் அலங்கார வளைவில் 44 அடி உயரத்தில் பிரமாண்டமான பத்திரகாளி அம்மன் சிலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து தர்ம வித்யா பீடம் வெள்ளிமலை ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்த் ஜி மகராஜ், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சக்திய ஞானதேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீ வைகுண்டம் செங்கோல் ஆதினம், பிலாகோடு தேவாலய பங்கு பணியாளர் அகஸ்டின், பாஜக மாவட்ட தலைவர் ஆர் டி சுரேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் தர்மராஜ், இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மிசா சோமன் உட்பட பாஜக இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் திரளான தமிழக கேரளாவை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆசியுரை நடைபெற்றது.



