தஞ்சாவூர், ஜனவரி 27 –
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகமாக உள்ள நிலையில் அமைதியாக உள்ள தமிழ்நாடு குறித்து பிரதமர் மோடி அவதூறு பரப்புகிறார் என்று அவர் கூறினார்.
தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்கிற டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது: இரு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி ஏராளமான பொய்களை சொல்லிவிட்டு சென்றார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் குறிப்பாக பாஜகவினரால் பெண்கள் படும் தொல்லைகள் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டே தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பி சென்றார்.
இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான். இங்கு தான் அதிகமான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். அண்மையில் ‘அவதார்’ என்ற குழுமம் இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம், கல்வி உள்ளிட்ட சமூக காரணிகளில் சிறந்து விளங்கும் நகரங்களில் பட்டியலை வெளியிட்டது. மொத்தம் 125 நகரங்கள் கொண்ட அந்த பட்டியலில் முதல் 25 இடங்களில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு ஆகிய 7 நகரங்கள் இருந்தன.
கடந்த 2023 மே மாதம் எரியத் தொடங்கிய மணிப்பூர் இதுவரை 260 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் இரு மடங்கு இருக்கும். 3000 பேர் காயமடைந்தனர். ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் மாநிலத்தை விட்டு இடம்பெயர்ந்து விட்டனர் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் மணிப்பூர் ஆட்சி செய்தது பாஜக தான். உங்கள் இரட்டை எஞ்சின் என்கிற டப்பா என்ஜின் மணிப்பூர் மக்களை ஏன் காப்பாற்றவில்லை? மணிப்பூரை ஆட்சி செய்த பாஜக ஏன் அமைதி ஏற்படுத்த முடியவில்லை? மணிப்பூரையும், உத்தரப்பிரதேசத்தையும் பிரதமர் சென்று பார்க்க வேண்டும்.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக ஆளும் இரு மாநிலங்கள் மூலமாகத்தான் போதைப்பொருள் பரவுகின்றன என ஆதாரத்துடன் செய்திகள் வருகின்றன. இதையெல்லாம் மறைத்து விட்டு அமைதியான தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்ப வேண்டாம். புதிதாக கூட்டணி உருவாக்கி விட்டது போன்று பிரதமர் தோள் உயர்த்தி இருக்கிறார். அது ஏற்கனவே தோற்றுப் போன கூட்டணி. எந்த வடிவத்தில் வந்தாலும் உங்களுக்கு இடம் இல்லை என தமிழ்நாடு மக்கள் திரும்பத் திரும்ப சொல்லிவிட்டனர்.
பாஜக – அதிமுக கூட்டணி கட்டாயத்தால் உருவாகியிருக்கும் கூட்டணி என அனைவருக்கும் தெரியும். மிரட்டல் உருட்டலால் உருவான கூட்டணி. உண்மையான அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக, அமித்ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி. முழுவதும் தன்னுடைய சுய லாபத்துக்காக, வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தன்னுடைய பதவியை தக்க வைத்துக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி உருவாக்கிய சுயநல கூட்டணி. டெல்லியில் இருந்தே தமிழ்நாட்டையும் ஆளலாம் என பாஜக நினைக்கிறது. உங்களுக்கு தக்க பதிலடி தமிழ்நாடு தரும். வருகிற தேர்தல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கிடையாது. தமிழ்நாட்டுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் என்பதை மறந்து விட வேண்டாம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மீண்டும் வெற்றியை வழங்க மக்கள் தயாராகி விட்டனர் என்றார் முதல்வர்.
மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்பி ஆகியோர் பேசினர். முன்னதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அனைவரையும் வரவேற்றார் .நிறைவாக சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகரன் நன்றி கூறினார்.



