மாநில அளவிலான குடியரசு தின தடகளப்போட்டியில் ஈரோடு மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 4 மாணவிகள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். மாணவி ஆபியா 1500 மீட்டர் ஒட்டத்தில் தங்கப்பதக்கமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 3500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும், மாணவி தனுஷ்கா 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும், மாணவி அனுரெக்ஸி 600 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும், மாணவி அக்ஷயா இளையோருக்கான தென்மண்டல போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றனர். மேலும், இவர்கள் நால்வரும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றிபெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவிகளுக்கு மயிலாடுதுறை ரயில் நிலையில், அப்பள்ளி மாணவ-மாணவிகள் 100-க்கு மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி, காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் ரயில்வே போலீஸார், ஆர்பிஎப் பள்ளியின் தாளாளர் அலெக்சாண்டர், மற்றும் போலீஸார் ஆகியோர் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மாணவிகளின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பள்ளி நிர்வாகிகள் அப்பள்ளி அமைந்துள்ள பகுதியில் ஏழைக்குடும்பத்தினர் 20 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலஉதவிகளை பள்ளியின் தலைவர் ராதாகிருஷ்ணன்,வழங்கி வெற்றியின் மகிழ்ச்சியில் தாங்களும் பங்கெடுத்துக் கொண்டனர்.



