தென்காசி, நவ. 13 –
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ராமச்சந்திரபட்டணம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். அரசு பள்ளி ஆசிரியரான இவருக்கும் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த பொன்செல்வி என்ற பெண்ணிற்கும் இடையே கடந்த 2016-ம் வருடம் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
இந்த நிலையில் இருவரும் அவ்வப்போது வீட்டிற்கு தெரியாமல் தனிமையில் சந்தித்து வந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பொன்செல்வியின் கணவர் சொந்த ஊருக்கு சில மாதங்களில் திரும்புவதாக பொன்செல்வியிடம் தெரிவித்த நிலையில் அரசு ஆசிரியரான சந்தோஷின் பழக்கத்தை படிப்படியாக பொன்செல்வி துண்டிக்க தொடங்கியுள்ளார்.
இருந்தபோதும் சந்தோஷ் விடாமல் பொன் செல்வியின் குழந்தைகளை உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு தன்னுடன் வாழ வருமாறு பொன்செல்வியை வற்புறுத்தியதாக கூறப்படும் நிலையில் அவரது தம்பியான முருகன் மற்றும் தந்தையான தங்கப்பாண்டி என்பவரிடம் பொன்செல்வி நடந்ததை கூறவே சந்தோஷை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சந்தோஷிற்கு கறி விருந்து வைப்பதாக அழைத்து அவருக்கு மதுபானத்தில் விஷம் ஊற்றி அவரை கொலை செய்து பொன்செல்வி வசித்து வந்த வீட்டின் பின்பக்கம் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
இந்த நிலையில் கணவரை காணவில்லை என சந்தோஷின் மனைவி அனுஷா என்பவர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது சந்தோஷை திட்டமிட்டு பொன்செல்வியின் குடும்பத்தினர் கொலை செய்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து அவர்கள் மூவரையும் கைது செய்து இது தொடர்பான வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நிறைவு பெற்று தற்போது பொன்செல்வி, முருகன், தங்கபாண்டியன் ஆகிய மூன்று பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், கூடுதலாக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி மனோஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



