தென்காசி, செப். 4 –
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 32 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது நகரின் பல்வேறு பிரச்சினைகளான தெரு விளக்கு, சாலை வசதி, நாய் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை உறுப்பினர்கள் விவாதித்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படத்தை நகர்மன்ற கூட்டரங்கில் வைக்க கோரி நகர மன்ற தலைவரிடம் உறுப்பினர்கள் வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.
அப்போது பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்த போது கடந்த 2023 ஆம் ஆண்டு அனைத்து வார்டு உறுப்பினர்கள் ஒப்புதலோடு பிரதமர் நரேந்திர மோடி படத்தை வைத்த நிலையில் அதன் பின்னர் திமுக கூட்டணி உறுப்பினர்கள் ஆதரவோடு படத்தை அகற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றி அதை உடனடியாக அப்புறப்படுத்தினர். இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இன்று நடந்த கூட்டத்தொடரில் மீண்டும் பா.ஜ.க உறுப்பினர்கள் பிரதமர் உருவப்படத்தை நகர மன்ற கூட்டரங்கில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் அகற்றியதை அடுத்து மீண்டும் அவரது படத்தை வைக்கக் கோரி பா.ஜ.க நகர்மன்ற உறுப்பினர்கள் 1-வது வார்டு ரேவதி பாலீஸ்வரன், 15-வது வார்டு சங்கரநாராயணன், 22-வது வார்டு மகேஸ்வரி ஆகியோர் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து கூட்டத்தை முடித்துவிட்டு நகர் மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மோடியின் படத்தை வைக்கும் வரை கூட்ட அரங்கை விட்டு செல்ல மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் மூன்று உறுப்பினர்களும் ஈடுபட்டனர். இதை அறிந்த பாஜக தொண்டர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு கூடி அவர்களுக்கு ஆதரவாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக அப்புறப்படுத்தி அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாறாக பாரதிய ஜனதா கட்சியினர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நகர் மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாரதப் பிரதமர் மோடியின் படத்தை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.



