சவுதி அரேபியா, நவம்பர் 17 –
இஸ்லாமியர்களின் புனித பயணங்களில் ஒன்று ஹஜ். பல்வேறு நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதீனாவிற்கு இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்வர்கள். அந்த வகையில் இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து சவுதி அரேபியாவிற்கு புனித பயணம் சென்ற ஒரு குழுவினர் மெக்காவில் தங்களது புனித பயணத்தை முடித்து விட்டு மதீனா நோக்கி பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது புனித பயணம் சென்ற பேருந்தும் எதிரே வந்த டீசல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 ஆண்கள், 20 பெண்கள், 11 குழந்தைகள் என 42 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் 43 பேர் பயணம் செய்ததாகவும், ஒருவர் மட்டுமே உயிர் தப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த விபத்து தொடர்பாக சவுதி அரேபிய அரசோடு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டறிந்து வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் உடலை இந்தியா எடுத்து வரவும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



