நாகர்கோவில், ஜன. 10 –
புதுக்கடை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அறிமுகமில்லாத ஒன்றுக்கு மேற்பட்ட வாட்சப் நம்பர்களில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி மர்ம நபர் ஒருவர் அனுப்பியுள்ளார். மேலும் போலி இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து அந்த பெண் பேசுவது போன்று பிற நபர்களிடம் ஆபாச சாட்டிங் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து தனக்கு களங்கம் ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த குற்றவாளியை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்கள்.
உத்தரவின்படி, சைபர் கிரைம் காவல் நிலைய உதவி காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் மேற்பார்வையில், ஆய்வாளர் பார்வதி, உதவி ஆய்வாளர் அஜ்மல் ஜெனிப் ஆகியோர் தலைமையில் போலீசார், குற்றவாளியை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச சேட்டிங் மற்றும் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி இளம் பெண்ணின் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்திய புதுக்கடை அருகே பைங்குளம், விளைவீட்டுவிளை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் அருள் லிங்கம் (43) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார் . சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.



