நாகர்கோவில், நவ. 10 –
ஆரல்வாய்மொழி அருகே குழந்தை திருமணம் நடந்து இருப்பதாக மாவட்ட சமூக நலத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று அதிகாரிகள் குழு விசாரணை நடத்தினர். இதில் பணகுடியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆரல்வாய்மொழி அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 28 வாலிபர் திருமணம் செய்து, குடும்ப நடத்தி வந்தது தெரிய வந்தது.
சிறுமியின் பள்ளி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அவருக்கு 18 வயது நிரம்பவில்லை என்பது உறுதியானது. இதை அடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ் (28) என்பவரை கைது செய்தனர்.
மேலும் சிறுமியின் பெற்றோர், சுரேஷ் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். குழந்தைகள் திருமணத்தை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான புகார்களை 1098 என்ற எண்ணிலும் மற்றும் சமூக நலத்துறைக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


