கருங்கல், டிச. 5 –
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: யாகாவாராயினும் நாகாக்க எனும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப கறை படாத கரத்துக்கு சொந்தக்காரர் தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த கர்மவீரர் காமராஜர் குறித்து பேசுவதற்கு முன் தன்னுடைய தகுதியை பற்றி முக்தார் அகமது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் 9 ஆண்டுகள் சிறைவாசமும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 12 ஆண்டுகளும், தமிழ்நாடு முதலமைச்சராக ஒன்பதரை ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி செய்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர் பெருந்தலைவர் காமராஜர். வேட்டி கட்டிய தமிழர்கள் எவரும் சாதிக்க முடியாத சாதனைகளை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று இரண்டு பிரதமர்களை மூன்று முறை தேர்வு செய்த பெருமை பச்சைத் தமிழர் காமராஜருக்கு உண்டு.
காமராஜர் அவர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்கள் அவர்கள் இறக்கும் பொழுது அவர் பாக்கெட்டிலே என்ன இருந்தது அவருக்கு உடமையாக சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டிலிருந்து நான்கு ஐந்து வேஷ்டி துண்டுகளோடு மறைந்து போனவர் காமராஜர் என்பதை வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும் எதை பேசுகிறோம் என்ன பேசுகிறோம் ? சுய நினைவில் தான் பேசுகிறோமா என தெரியாமல் எதை எதையோ பிதற்றி இருக்கிறார் முக்தார் அகமது.
தமிழகத்தில் எந்த சொத்தும் இல்லாதவர்களுக்கு இலவச கல்வி என்ற சொத்தை வழங்கி வாழ்க்கையை உயர்த்தியவர். தமிழ்நாட்டிற்கே ஈடு இணையற்ற பெருமைகளை வழங்குவதற்கு தமது அரசியல் வாழ்க்கையில் நேர்மை, எளிமை, தூய்மையை கடைபிடித்து வாழ்ந்தவர். கர்மவீரர் காமராஜர் என்ற மாமனிதரை மை இந்தியா 24×7 என்ற யூடியூப் சேனல் நடத்துகிற முக்தார் அகமது என்பவர் இழிவாக ஆதாரமற்ற அவதூறு கட்டுக்கதைகளை கூறி கேவலப்படுத்தியிருப்பதை தமிழக மக்கள் எவராலும் சகித்துக் கொள்ள முடியாது.
தமிழகத்தை தாண்டினாலே கோட்டும் சூட்டும் போட்டு அலையும் அரசியல் அலப்பறைகள் மத்தியில் ரஷ்யா நாட்டுக்கு சென்ற போது கூட வேட்டி சட்டையில் சென்ற எளிமைக்கு சொந்தக்காரர் கர்மவீரர் காமராஜர். முக்தார் அகமது போன்று தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்கள் கர்மவீரர் காமராஜரை பற்றி தொடர்ந்து பேசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமது வாழ்க்கையை திறந்த புத்தகமாக அமைத்துக் கொண்ட பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்திய முக்தார் அகமதுவை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் எவரையும் கீழ்த்தரமாக இழிவுபடுத்துகிற போக்கு சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடே போற்றி புகழ்ந்த மகத்தான தலைவரை இழிவுபடுத்தியவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



