தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் வேதம்பட்டி கிராமத்தில் தோட்டக்கலை துறையின் சார்பில் 10.12 ஹெக்டேர் பரப்பளவில் மா மகத்துவ மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் முதல் கட்டமாக பெங்களூரா, அல்போன்சா, பங்கனபள்ளி மற்றும் இமாம்பசந்த் ரகங்களின் செயல் விளக்கத்திடலில் மாங்கன்றுகளை நடவு செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது ஆட்சியர் கூறியதாவது. தருமபுரி மாவட்டத்தில் மா மகத்துவ மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. மா சாகுபடியில் உயர் தொழில் நுட்ப செயல் விளக்க திடல்கள் அமைத்து மா உற்பத்தி திறனை அதிகப்படுத்துதல், தரமான நடவு பொருட்களை விவசாயிகளுக்கு வழங்குதல் மற்றும் மாசாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் சார்ந்த பயிற்சி வழங்குதல் ஆகியன மா மகத்துவ மையத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த மகத்துவ மையத்தில் 4 ஹெக்டேர் பரப்பில் மாதிரி செயல் விளக்க திடல்கலும், ஒரு ஹெக்டேர் பரப்பளவில் மா தாய் செடி வயலும்,1.5 ஹெக்டேர் பரப்பளவில் கட்டமைப்பு வசதிகள் உடன் கூடிய நாற்றங்கால் அமைக்கப்பட உள்ளது. மா சாகுபடி தொழில்நுட்பங்கள், மா வளர்ப்பு முறைகள், ரகங்கள், மதிப்பு கூட்டல் போன்றவற்றுக்கு வழிகாட்டும் மையத்தின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கூறினார். இந்த ஆய்வின்போது தருமபுரி தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாத்திமா, மொரப்பூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேஷ் கண்ணன், அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.



