தருமபுரம் ஆதீனத்துக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் இந்து அமைப்பினர் புகார் மனு அளித்தனர். இந்து எழுச்சி பேரவை மாநில தலைவர் பழ.சந்தோஷ்குமார் தலைமையில், அகில பாரத மக்கள் கட்சி, இந்து புரட்சி முன்னணி மற்றும் பாபு பரமேஸ்வரன் ஜி .மாநில தலைவர் உள்ளிட்ட இந்து அமைப்பினர் கூட்டாக வந்து இந்த மனுவை அளித்தனர். இந்து எழுச்சி பேரவை மாநில செயலாளர் ஜெயஸ்ரீதேவன் அளித்த புகார் மனுவில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மற்றும் திருமடம் குறித்து, வீண் விளம்பர ஆதாயத்துக்காக சிறுமைப்படுத்தி வழக்கறிஞர் என்ற போர்வையில் தொடர் அவதூறுகள் மற்றும் பிரிவினைவாதம் பேசி சமூக அமைதியை சீர்க்குலைக்க முயற்சிக்கும் சங்கமித்ரன் ஆசிர்வாதம் என்ற நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்விச் சாலைகள், அன்னதானக் கூடங்கள் அமைத்து மக்கள் நலப்பணிகளுக்காக அரசு முன்னெடுக்கும் அனைத்து விஷயங்களுக்கும் ஆதீனத்தின் சொத்துக்களை அர்ப்பணித்து, அனைத்து பகுதிகளிலும் விளிம்புநிலை மக்களுக்கான வாழ்வாதாரங்களை அமைத்து, மக்கள் சேவை ஆற்றி வரும் தருமபுரம் ஆதீனம் குறித்து, சங்கமித்ரன் என்ற நபர் ஏப்.28-ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் உண்மைக்கு புறம்பாக, பொய் தகவல்களை பேசி அவதூறு செய்திகளை பரப்பியுள்ளார். தொடர்ந்து இந்து தர்மத்துக்கும், ஆதீனத்தின் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் அவர் மீது காவல்துறை உரிய சட்ட நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அந்த புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்துக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கறிஞர் மீது மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் இந்து அமைப்பினர் புகார்.



