ஈரோடு, டிச. 10 –
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் ஈரோடு வில்லரசம் பட்டியில் ஆலோசனை கூட்டம் மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன் தலைமையில் நடந்தது.
இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு ஈரோடு வில்லரசம் பட்டியில் வருகிற ஜனவரி மாதம் 4 ந் தேதி நடக்கிறது
இதில் மத்திய விவசாய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மத்திய மந்திரி முருகன் தமிழக பாரதிய ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் ஏராளமான தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் விவசாயிகள் 15 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். 200 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இந்த கண்காட்சியில் இடம் பெறுகிறது. விவசாயிகளின் சந்தை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக இந்த கண்காட்சி நடக்கிறது. மேலும் வள்ளிகும்மி நடனம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இங்கு நடக்கிறது. இந்த மாநாடு மத்திய அரசின் திட்டங்கள் சலுகைகள் விவசாயிகளிடம் போய் சேருவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
திருப்பரங்குன்றம் கோவில் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் திமுக நாடகம் ஆடுகிறது இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வருகிற தேர்தலில் திமுகவுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள் இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில விவசாய அணி செயலாளர் பன்னீர்செல்வம், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



