தருமபுரி, நவம்பர் 22 –
தருமபுரி மாவட்டம் ஏ.கொல்லஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாய் மேடு பகுதியில் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஊராட்சி நிர்வாகம் முறையாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்காமல் வந்துள்ளது. இது சம்பந்தமாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென்று தருமபுரி, ஏ.கொல்லஅள்ளி செல்லும் சாலையில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி செயலாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் பிரச்சினையை உடனடியாக சரி செய்து தருவதாக கூறினார். இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



