கட்டுமானப் பணிகளை தரமாகவும், காலதாமதமின்றியும் முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
சேலம், செப்.12:
பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் தரமாகவும், உரிய காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் ஏத்தாப்பூர் பேரூராட்சி மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஏத்தாப்பூர் பேரூராட்சியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஒரு நாளைக்கு 10,000 லிட்டர் திடக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், தேசிய சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டார்.
பணிகளை தரமான முறையில்வும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள படுக்கை வசதிகள், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, பிரசவத்துக்கு பிந்தைய கவனிப்பு அறை, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ சேவைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்திற்காக கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தையும், நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



