தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் – ஈரோடு ஆட்சியர் கந்தசாமி தகவல்
ஈரோடு, செப்.11:
மார்ச் 2026-ல் நடைபெற்ற மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகளை எழுதிய தனித்தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களுக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
மேல்நிலை பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரையிலும், இடைநிலை பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரையிலும் நடைபெற்றது. தொடர்ந்து, மேல்நிலை பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதியும், இடைநிலை பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதியும் வெளியிடப்பட்டன.
மார்ச் 2026 மேல்நிலை பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் கடந்த ஜூலை 30-ம் தேதியும், இடைநிலை பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்டு 12-ம் தேதியும் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தேர்வு மையத் தலைமையாசிரியர்களிடம் தனித்தேர்வர்களுக்கு வழங்குவதற்காக ஒப்படைக்கப்பட்டன.
தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை கொண்டு சென்று, அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம். 90 நாட்களுக்குப் பிறகு பெறப்படாத சான்றிதழ்கள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேர்வு மையங்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு 40 நாட்களுக்கும் மேலாகியும், பெரும்பாலான தனித்தேர்வர்கள் அவற்றை பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர். எனவே, மார்ச் 2026 மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகளை எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன் சென்று உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தேர்வில் தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்க மதிப்பெண் சான்றிதழ் அவசியமாகும். எனவே, அவர்கள் காலதாமதம் செய்யாமல் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்குச் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.



