நாகர்கோவில், ஆக. 03 –
குமரி மாவட்டம் முழுவதும் உள்ள நகர்ப்புற அரசுப் பள்ளிகளில் சுகாதாரம் பேணவும், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் மாத ஊதியமான ₹1,500-ஐ உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. கப்பியோரை பேரூராட்சி மன்ற உறுப்பினரும், கஞ்சிகுழி அரசு நடுநிலைப் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவருமான எல். ஆன்சி சோபா ராணி இக்கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய விவரங்கள்: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் பராமரிப்பு, வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத் தூய்மைப் பணிகளுக்காக தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ₹1,500 வீதம் ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2024-ஆம் ஆண்டின் இறுதியில், நகர்ப்புறப் பகுதிகளில் செயல்படும் அரசுப் பள்ளிகள் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, ஜனவரி 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான ஒரு வருட காலத்தில் பள்ளித் தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியமும், தூய்மைப் பொருட்கள் வாங்குவதற்கான நிதியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், இனிமேல் நிதி வழங்க முடியாது என நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, நிலுவையில் உள்ள பழைய தொகையுடன் சேர்த்து தற்போதைய ஊதியத்தையும் விரைந்து வழங்கி, அரசுப் பள்ளிகளின் சுகாதாரத்தையும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



