திருப்பூர், ஜூலை 10 –
தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கென தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்பொழுது, கடைக் கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைத்து சேவைகளும் அவர்கள் இல்லத்திற்கே சென்றடையும் வகையில் கடந்த 18ம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. எனவே, அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சமூக தரவுகள் கணக்கெடுப்பாளர்கள் இல்லம் தேடி வரும் பொழுது உரிமைகள் திட்ட பணியாளர்களுக்கு உங்களுடைய BDS, Aadhar, Voter ID மற்றும் அவர் கேட்கும் அனைத்து தகவல்களையும் SPDS வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பொழுது, ஆவணங்களை கொடுத்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகளும், அரசு நலத்திட்ட உதவிகளும் இப்போது ஓரே இடத்தில் கிடைக்கும் ஒருங்கிணைந்த சமூக சேவை மையம் தான் “விழுதுகள்” மையம். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை எளிதாகப் பெற இந்தத்திட்டம் உதவுகிறது.
மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் மொத்தம் 3“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் பிசியோதெரபி, தொழில்முறைச் சிகிச்சை, பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை, உளவியல் ஆலோசனை, சிறப்புக் கல்வி உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மேலும், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை எளிதாக ஒரே இடத்தில் பெறும் வகையில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. UDID அட்டைக்கு விண்ணப்பித்தல், பெற்றோர் மற்றும் பாதுகாவர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் 23 வட்டாரங்களிலும் வட்டார அளவிலான விழுதுகள் ஒருங்கிணைந்த சமூக சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு தற்போது அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம். கரடிவாவி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நம்பியாம்பாளையம் , குடிமங்கலம், கனியூர், (மடத்துக்குளம்) ஆகிய 4 இடங்களில் மையங்கள். இம்மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. மீதமுள்ள மையங்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த மையங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உளவியல் ஆலோசனை, பியோதெரபி, சிறப்புக் கல்வி, பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை ஆகிய நான்கு வகையான மறுவாழ்வு சேவைகள் அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே வழங்கப்படுகின்றன
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக, 242-க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்கள். கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, சமூக தரவுகள் கணக்கெடுப்பு செய்து, அவர்களின் தேவைகளை கண்டறிந்து, தேவையான மறுவாழ்வு சேவைகள் கிடைக்க வழிகாட்டி வருகின்றனர். கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் வாழும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் தரமான மறுவாழ்வு சேவைகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதே தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், தகவல்களுக்கு, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது அருகிலுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை அணுகலாம். இலவச உதவி எண் :1800 4250 111 சைகை மொழியில் தொடர்பு கொள்ள: 9498345350 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) ஜெகஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.



