நாகர்கோவில், ஜன. 9 –
அஞ்சுகிராமம் அருகே மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் அகிலாஸ் என்ற அஜய் என்ற அப்துல்லா (37). கடந்த 2015 ஆம் ஆண்டு அகிலாஸ் சுசீந்திரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பறக்கை அருகே ஒரு வீட்டில் தங்கி இருந்த லைசா என்ற பெண்ணை கொலை செய்து, சாக்கு முடையில் கட்டி வைத்துவிட்டு தலை மறைவானார். பின்னர் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அகிலாஸ் மற்றும் அவரது கூட்டாளியை கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு விசாரணை நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அகிலாஸ் கடந்த 2023-ல் வடசேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளி விளையல் ஒரு பெண்ணுடன் பழகி அந்தப் பெண்ணை கொலை செய்தார். இந்த கொலை வழக்கிலும் அகிலா ஸ் கைதாகி ஜாமீனில் தற்போது வெளியில் உள்ளார். இந்த வழக்கு விசாரணையும் நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் கடந்த ஆறு மாதங்களாக அகிலாஸ் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.
அவரை பிடிக்க தனி படை அமைத்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் அகிலேஷை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் தற்போது நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற தனிப்படையினர் இன்று அகிலாஷை சுத்தி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைத்தனர். அகிலாஸ் மீது 2 பெண்கள் கொலை வழக்குகள் உட்பட 8 வழக்குகள் உள்ளன. மேலும் போலீஸ் குற்றவாளிகள் சரித்திர பதிவேடு பட்டியலிலும் இவர் உள்ளார்.


