களியக்காவிளை, அக். 10 –
களியக்காவிளை காவல் நிலையத்துக்கு உட்பட்ட அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அகிலேஷ் நாடார். இவரது மகள் ஜெகதீஷ் குமாரி என்ற டாடா (50). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கு மூன்று சகோதரர்களும், ஒரு சகோதரியும் உண்டு. இவர்கள் வசதியான பாரம்பரிய அமைக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது இவர் இவரது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் அதிக நகைகள் உள்ளது என வட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்த நிலையில் மர்ம நபர் சமயம் பார்த்து உள்ளே புகுந்துள்ளார். அப்போது வீட்டில் பிரோவில் இருந்த 90 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார். கொள்ளை நடந்து சில தினங்கள் கழிந்த பின்னரே ஜெகதீஷ் குமாரிக்கு நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஜெகதீஷ் குமாரி களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது ஏற்கனவே பல குற்றங்களில் தொடர்புடைய கொள்ளையன் ஒருவனை அடையாளம் கண்டு தேடிவந்தனர். இந்நிலையில் காஞ்சாபுரம் பகுதியைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளது. விசாரணையில் அந்த பெண்மணி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டதோடு அவர் வீட்டில் நகை இருப்பதை உறுதி செய்து கொண்டும், கொள்ளையன் வீட்டிலிருந்த நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
மேலும் பல நாட்களாக நகை கொள்ளை குறித்து புகார் கொடுக்காததை அடுத்து அந்தக் கொள்ளையன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள பிரபல நகை கடைகளில் பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகள் வாங்கியுள்ளதும் தெரிய வந்தது. மேலும் கொள்ளையனின் மனைவி பாதி நகைகளை கையில் வைத்து சுற்றிக்கொண்டு திரிவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் போலீசார் பிடிபட்ட குற்றவாளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு நகைகளை கைப்பற்றும் பணியிலும் கொள்ளையர்களை கைது செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நகைக் கொள்ளை சம்பவம் களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


