பூதப்பாண்டி, டிசம்பர் 17 –
நாகர்கோவில் அருகே விசுவாசபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். ஆனால் அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று இரவு மர்மநபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் முதலமைச்சர் மற்றும் பிரதமர் வீடுகளிலும், குமரியில் பல இடங்களிலும் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதுபற்றி சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து குமரி மாவட்ட போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டி.ஜி.பி. அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசிய நபர் எங்கிருந்து பேசினார்? என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர். அப்போது அவர் பூதப்பாண்டி பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் நேற்றிரவு அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அவர் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பது தெரியவந்தது. அவர் குடிபோதையில் இதுபோன்ற மிரட்டல் வேலையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இசக்கி முத்துவை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இவர் தான் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுத்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்ட வாலிபர் கடந்த 2023-ம் ஆண்டும் இதே போல் தொலைபேசியில் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



