திருவண்ணாமலை, செப். 29 –
திருவண்ணாமலை கிரிவல பாதையிலுள்ள எல்லோரா ஓட்டலில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில உயர்நிலைக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் வெ.மகேந்திரகுமார் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் அலுவலர் ர. பாபு முன்னிலை வகிக்க மாவட்ட தலைவர் மு. அமாவாசை அனைவரையும் வரவேற்றார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 4 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தலைமை செயலாளர் தலைமையில் நடைபெற்றுவந்த குடிமைபணியாளர் கூட்டுமன்ற கூட்டத்தினை மீண்டும் நடத்திட வேண்டும், அரசு அலுவலர் ஆசிரியர்களுக்கான 21 மாத ஊதிய குழு நிலுவையினை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாநில துணை தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் கோ.ஏழுமலை, மாவட்ட பொருளாளர் கோ. பச்சையப்பன், மாவட்ட துணை தலைவர் முபாரக்பாஷா, மாவட்ட மகளிரணி காவேரி, மாவட்ட இணை செயலாளர் திருஞானம் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள் இணைப்பு சங்கங்களின் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் பெ. திலகர் நன்றி கூறினார்.



